Benefits of Yoga : யோகா செய்வதால் கிடைக்கும் பயன்கள்
மனித இன வளர்ச்சிக்கு இந்தியா நமக்கு கொடுத்திருக்கும் பழமையான கலைகளில் யோகா கலை 5000 ஆண்டுகளை கடந்த மிக சிறப்பு வாய்ந்தது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஐ சர்வதேச யோகா தினமாக அறிவித்துள்ளது. உடலை வலிமையாக வைத்திருக்க உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமானதோ அதே போல் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க யோகா பயிற்சி மிகவும் அவசியமாகும். இதன் நன்மைகளை நம்மால் வார்தைகைகளால் விவரிக்க முடியாது. இதனை முறைப்படி செய்து அனுபவித்தல் மட்டுமே இதன் நன்மைகளை முழுமையாக உணர முடியும். நாம் தினமும் யோகாசனம் செய்வதை பழக்கமாக்கிக் கொண்டால் நமது உடலில் ஏற்படும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
தினமும் யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
1. மன அழுத்தத்தை குறைக்கும்:
யோகாசனம் நமது மனதை ஒருநிலைப்படுத்த உதவும் ஒரு அற்புதமான கலையாகும். கடுமையான வேலை செய்பவர்கள், பதற்ற நிலையில் இருப்பவர்கள், மனதளவில் அதிக கவலைகளைக் கொண்டவர்கள் தினமும் யோகாசனம் செய்து வந்தால் மன அழுத்தம் குறையும். இதன் மூலமாக நாம் மனதளவில் ஆரோக்கியமாகவும் முழுமையாகவும் உணர முடியும்.
2. உடல் சூட்டை குறைக்கும்:
கோடை காலங்களில் நமது உடல் உஷ்ணமாகிறது. உடல் உஷ்ணம் என்பது காய்ச்சலாக இல்லாமல் நமது உடலின் வெப்பநிலை சராசரியான உடல் வெப்பநிலையை விட சற்று அதிகமாக இருப்பதே ஆகும். இது நமது உடலில் நீரிழப்பு, தூக்கமின்மை, வாய்ப்புண், செரிமான கோளாறு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். நமது உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ள யோகாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
3. சுவாசப் பிரச்சினைகளை தடுக்கும்:
சுவாசம் என்பது யோகாவில் ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு யோகாசனம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. ஆஸ்துமா என்பது நுரையீரல் சம்பந்தமான ஒரு வியாதி ஆகும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவது மிகவும் சிரமமாக இருக்கும். ஆகையால் நாம் யோகா பயிற்சிகளை தினசரி மேற்கொண்டு வர ஆஸ்துமா நோயிலிருந்து விடுபடலாம்.
4. தீய பழக்கத்திலிருந்து விடுபட உதவும்:
நம்மை அடிமையாக வைத்திருக்கும் ஒரு செயலில் இருந்தும் தீய பழக்கத்திலிருந்தும் நம்மை விடுவித்துக் கொள்ள யோகாசனம் மிகவும் உதவுகிறது. நாம் நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் பழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் மற்றும் போதைப் பழக்கங்கள் போன்றவைகளுக்கு அடிமையானவர்களை மீட்பதற்கு தியானமும் யோகாசனமும் பயனளிக்கும்.
5. தூக்கமின்மைக்கு தீர்வாக உள்ளது:
நம்முடைய மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளை சிந்திப்பதால் இரவு நேரங்களில் தூக்கம் வராமல் தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். அன்றாடம் நாம் யோகாசனம் பயிற்சிகளை மேற்கொண்டு வர மனதை ஒருநிலைப்படுத்தி சிதறி கிடக்கும் எண்ணங்களை ஒரே நேர்கோட்டில் கொண்டு வர முடியும். நல்ல மன அமைதியானது சீரான உறக்கத்திற்கு வழி வகுத்து தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும்.
6. தீராத நோய்களை தீர்க்கும்:
யோகா செய்வதன் மூலம் மருத்துவர்களால் கைவிடப்பட்ட சில பெரிய நோய்களையும் நம்மால் குணப்படுத்த முடியும். மருத்துவர்களின் அறிவுரைப்படி யோகா பயிற்சியை முழு மனதுடனும் நம்பிக்கையுடனும் செய்துவர உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தீராத நோய்களையும் எதிர்த்து போராடும் எதிர்ப்பு சக்தியை நமக்குத் தருகிறது.
7. உடலை கட்டுக்கோப்போடு வைத்திருக்கும்:
இன்றைய நவீன காலகட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் துரித உணவுகளால் உடல் பருமன் மற்றும் ஒழுங்கற்ற உடல் அமைப்பு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. நாம் யோகாசனப் பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது உடலை பல கோணங்களில் மாற்றி செய்வதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிக்கிறது. இது நம்முடைய எடை கட்டுப்பாட்டிற்கு வழி வகுத்து நம்மை பிட்டாக வைத்திருக்க உதவுகிறது.
8. உடல் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது:
நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் பொழுது நமது உடலில் முதுகு வலி, கால் வலி மற்றும் மூட்டு வலி போன்றவை ஏற்படுகிறது. யோகாசனம் செய்யும்பொழுது உடலில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. சிறு வயது முதலே யோகா பயிற்சிகளை மேற்கொண்டு வரும் பொழுது வயதும் முதிர்ச்சியினால் எலும்புகளில் ஏற்படும் தேய்மானங்களால் உண்டாகும் வலிகளை போக்க முடியும்.
9. உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்:
தினந்தோறும் யோகாசனத்தை ஒரு பழக்கமாக்கிக் கொல்லும்பொழுது மனச்சோர்வு நீங்கி அந்த நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது. நாம் ஒரு வேலையை உடலளவில் சுறுசுறுப்பாக செய்யும் பொழுது அதில் முழு கவனத்தையும் செலுத்தி சிறப்பாக செய்து முடிக்க முடியும். குழந்தைகள் சோம்பேறித்தனம் இல்லாமல் வளர பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே யோகா பயிற்சிகளை கற்றுக் கொடுக்கலாம்.
10. இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது:
யோகா செய்யும் பொழுது மூச்சை நன்றாக உள் இழுத்து மெதுவாக வெளியிடும் பொழுது இதயத்திற்கு தேவையான ஆக்சிஜன் முழுமையாக கிடைக்கிறது. இது உடலின் சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி வகுத்து பல இருதய சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கிறது.
11. செரிமான பிரச்சனைகளை தடுக்கிறது:
தினமும் யோகா பயிற்சிகளை செய்யும்பொழுது நாம் உட்கொள்ளும் உணவில் உள்ள கழிவு பொருட்களை குடலின் வழியாக வேகமாக கொண்டு செல்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. இது பெருங்குடலில் ஏற்படும் புற்று நோயின் அபாயத்தை குறைப்பதோடு குடல்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும் தியானங்கள் மூலமாக நமது உடலை ஒரு சில அமைப்பிற்கு கொண்டு செல்லும் பொழுது கழிவுகள் வேகமாக நகர்கின்றன என்று உணரப்படுகிறது.
12. வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது:
நாள்தோறும் காலை வேலைகளில் யோகா பயிற்சிகளை செய்யும் பொழுது நமது உடலில் ஏற்படும் சீரான ரத்த ஓட்டம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் தசை நகர்வுகள் நாம் உண்ணும் உணவில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் முழுமையாக உறிஞ்சுவதற்கு அனுமதிக்கிறது. இது ஒரு மனிதனின் வளர்ச்சிதை மாற்றத்திற்கு பெரும் உதவியாக இருக்கிறது.
பொறுப்புத் துறப்பு:-
இந்த இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் கல்வி மற்றும் தகவல் நோக்கங்களுக்காக பல தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. இவைகளை மட்டும் கொண்டு உடல் நலப் பிரச்சினைகள் அல்லது நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்தக் கூடாது. உங்கள் உடல் நலம் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால் தகுதி வாய்ந்த சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலை பெறவும். TamilCare.in தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை மட்டும் கொண்டு நீங்கள் முடிவெடுத்தால் அது உங்கள் சொந்த முயற்சியில்தான் செய்கிறீர்கள். நீங்கள் எடுக்கும் சுயமான முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.
Pingback: Benefits of Dragon Fruit : டிராகன் பழத்தின் நன்மைகள் » Tamil Care